கல்வான் தாக்குதல் சம்பவம் நடந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. எனினும், சீன ஆக்கிரமிப்பு பற்றி மத்திய அரசு இன்னும் தெளிவான விளக்கம் எதையும் தரவில்லை என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, சோனியா விடுத்துள்ள அறிக்கை:
எல்லையில் சீன ஆக்கிரமிப்பு தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து இதுவரை தெளிவான தகவல் வரவில்லை. இந்த விவகாரத்தில் தெளிவான பதிலை மத்திய அரசு தரும் என கடந்த ஓராண்டாக காங்கிரஸ் பொறுமையுடன் காத்திருந்தது. எத்தகைய சந்தர்ப்ப சூழ்நிலையில் எல்லையில் முன்னெப்போதும் நிகழ்ந்திராத சம்பவம் நடந்தது என்பது குறித்து மக்களுக்கு அரசு தெரிவிக்கும் என்று காங்கிரஸ் காத்திருந்தது. ஆனால், துணிச்சலான நம் வீரர்கள் செய்த தியாகம் குறித்து இதுவரை எந்த தகவலையும் அரசு தெரிவிக்கவில்லை.
இது தொடர்பான கவலையை காங்கிரஸ் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஆக்கிரமிப்பு எதுவும் நடக்கவில்லை என்று கடந்த ஆண்டு பிரதமர் மோடி சொன்ன கருத்துடன் நிற்கிறது.
பிரதமரின் இந்த கருத்துக்கு பின்னர் அங்கு நடந்த சம்பவம் குறித்த விரிவான தகவலை தாருங்கள் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதேபோல், 2020 ஏப்ரலுக்கு முந்தைய எல்லை நிலைப்பாட்டை மீட்டெடுப்பதில் எத்தகைய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றும் காங்கிரஸ் கேட்டு வருகிறது. சீனாவுடன் மேற்கொள்ளப்பட்ட படை வாபஸ் ஒப்பந்தம் ஒட்டு மொத்தமாக இந்தியாவுக்கு பயனளிப்பதாக இதுவரை தெரியவில்லை. கல்வானில் கடந்த ஆண்டு வீர மரணம் அடைந்த வீரர்களின் தியாகத்தை நினைவு கொள்வதில் தேசத்துடன் காங்கிரஸ் இணைந்து நிற்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.