உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்க உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்த நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சிக்கு எதிர்ப்பு நிலவுகிறது. இதனால், உ.பி. அமைச்சரவையை மாற்றி அமைத்து மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜ வியூகம் வகுத்து வருகிறது.
இந்நிலையில், இந்தி டிவி சேனல் ஒன்றுக்கு சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் அளித்த சிறப்பு பேட்டி:
யோகி ஆதித்யா அரசை உ.பி. மக்கள் வெறுக்கின்றனர். இந்த அரசு மீது அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதற்கு காரணம் இந்த அரசின் தவறான நிர்வாகமும், தோல்விகளும்தான். விலை உயர்வு, விவசாயிகள் மீது அக்கறையின்மை போன்றவற்றால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். இந்த அரசுக்கு சரியான பாடம் புகட்ட மக்கள் தயாராக இருக்கின்றனர்.
2022 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அல்லது பகுஜன்சமாஜ் கட்சிகளுடன் எந்த கூட்டணியும் நாங்கள் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால், கடந்த தேர்தல்களில் அவர்களுடன் வைத்துக் கொண்ட கூட்டணி மூலம் நல்ல பாடத்தை கற்றுக் கொண்டோம். உ.பி.மக்களுக்கு யார் நல்லவர்கள் என்பதை அவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும். ராமர் கோயில் நில முறைகேடு விவகாரத்தில் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த் ஷேத்ரஅறக்கட்டளை உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். சுப்ரீம் கோர்ட் முடிவுக்கு பின்னர் ராமர் கோயில் கட்டுமானம் நிஜமானது. ஆனால், இப்போது வெளியாகும் தகவல்களால் கோயில் கட்டும் நோக்கம் குறித்து மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இவ்வாறு அகிலேஷ் கூறினார்.
மாயாவதி கட்சி 9 எம்எல்ஏ
சமாஜ்வாடிக்கு தாவ தயார்
மாயாவதி தலைமையிலான பகுஜன்சமாஜ் கட்சியை சேர்ந்த 9 எம்எல்ஏக்கள் அகிலேஷை நேற்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள். இவர்கள் சமாஜ்வாடி சார்பில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.