திருப்பூரில் இருந்து செங்கோட்டை நோக்கிச் சென்ற அரசு பேருந்து, புளியங்குடி அருகே சிங்கிலிபட்டி பகுதியில் இன்று காலை விபத்துக்குள்ளானது.
செங்கோட்டைச் சேர்ந்த டிரைவர் மாரி (55) ஓட்டிச் சென்ற பேருந்து, மதுரை–தென்காசி தேசிய நெடுஞ்சாலை சிங்கிலிபட்டி பாலம் அருகே வந்தபோது, எதிரே வந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது. காரை மோதாமல் தவிர்க்கும் முயற்சியில் பேருந்து பக்கத்தில் இருந்த புளியமரத்தில் மோதி நின்றது.
அப்போது பேருந்தில் 45 பயணிகள் இருந்தனர். இதில் 23 பயணிகளும், எதிரே வந்த இருசக்கர வாகன ஓட்டியும் உட்பட மொத்தம் 25 பேர் படுகாயம் அடைந்தனர். பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கை, கால், தலை பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
காயமடைந்தவர்களை சொக்கம்பட்டி போலீசாரும், பொதுமக்களும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து பலரை மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு மாற்றினர். சிறிய அளவில் காயமடைந்தோர் புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்துக்கான வழக்கை சொக்கம்பட்டி போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் சென்று ஆய்வு செய்தார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
