கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை குடியாத்தம் தொகுதியில் வெற்றி பெற்ற காமராஜர்

1954 ஆம் ஆண்டு காமராஜர் முதலமைச்சராக பதவி ஏற்றபோது, அவர் சட்டமன்ற உறுப்பினராக இல்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். குடியாத்தம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் காமராஜர் நின்றார் .அப்போது பிளவுபடாத கம்யூனிஸ்ட் கட்சி அவரை எதிர்த்து நின்றது. தமிழ்நாட்டில் மற்ற எல்லாக் கட்சிகளும் அவரை ஆதரித்தன. சொல்லப் போனால் குடியாத்தத்துக்கும், காமராஜருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ‘அங்கே நிற்க வேண்டாம். அது உங்களுக்குப் பாதுகாப்பான தொகுதியில்லை’ என்று பலரும் அவரை பயமுறுத்தினர். ‘நீங்கள் விருதுநகரத்துக்காரர். அந்த வட்டாரத்திலேயே ஏதாவது ஒரு தொகுதியில் நிற்பதுதான் நல்லது’ என்றனர்.


காமராஜர் அவர்களது வாதத்தை ஏற்க மறுத்துவிட்டார். ‘நான் தமிழ்நாட்டுக்கே முதலமைச்சர். எல்லாப் பகுதி மக்களும் என்னை ஏற்றுக் கொள்கிறார்களா என்பது தெரிய வேண்டும். முடிவு எப்படியிருந்தாலும் பரவாயில்லை. எனக்காக ஒரு தொகுதியைக் காலி பண்ணச் சொல்வது முறையில்லை. இடைத்தேர்தல் வந்திருக்கிற தொகுதியில் நிற்பதுதான் நியாயம்’ என்று கூறிவிட்டார். தேர்தலில் கடுமையாக வேலை செய்தார். கிராமம், கிராமமாகப் போனார். குடிசைகளில் எல்லாம்கூட உட்கார்ந்து மக்களிடம் பேசினார். திறந்த ஜீப் ஒன்றை ஏற்பாடு செய்து, அதில் நின்று கொண்டே தெருக்களில் ஊர்வலமாக வந்தார்.

இதற்காக குடியாத்தத்திலேயே வாடகை வீடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு காமராஜர் தங்கினார். அவர் விரும்பி இருந்தால், மேல்சபை உறுப்பினராக ஆகி இருக்கலாம். இல்லையென்றால் காங்கிரஸ் கோட்டைகளாக அப்போது இருந்த ஏதாவது ஒரு தொகுதி எம்எல்ஏவை ராஜினாமா செய்ய வைத்து, அங்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டு சுலபமாக வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராக ஆகி இருக்கலாம். இதையெல்லாம் காமராஜர் விரும்பவில்லை. ஏற்கனவே காலியாக இருந்த குடியாத்தம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்தார்.



குடியாத்தம் தொகுதி, ‘கம்யூனிஸ்டு கட்சியின் கோட்டை’ என்று கருதப்பட்ட தொகுதியாகும். அங்கு காமராஜர் போட்டியிட்டது, அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்தது. காமராஜரை எதிர்த்து அன்றைய பிளவுபடாத கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கே.கோதண்டராமன் போட்டியிட்டார். தேர்தலில் காமராஜரை ஆதரித்து தந்தை பெரியார் பிரசாரம் செய்தார். அவர் தனது பிரசாரத்தில் காமராஜர் பச்சைத் தமிழர். அவர் முதலமைச்சராக ஆனால்தான் தமிழ்நாடு முன்னேறும் என்று குறிப்பிட்டார்.
ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை ரத்து செய்ததற்காக காமராஜருக்கு ஆதரவு தெரிவித்த அப்போதைய திமுக தலைவர் பேரறிஞர் அண்ணா, ‘குலக்கொழுந்தே! குணாளா , குடியாத்தம் சென்று வா , வென்று வா .’ என்று திராவிடநாடு இதழில் எழுதினார்.

முதலமைச்சராக பொறுப்பேற்று நான்கு மாத கால இடைவெளியில் 1954 ஆகஸ்டு மாதம் நடந்த குடியாத்தம் இடைத்தேர்தலில் காமராஜர் வெற்றி பெற்றார். அவருக்கு 64,344 ஓட்டுகளும், கம்யூனிஸ்டு வேட்பாளர் கோதண்டராமனுக்கு 26,132 ஓட்டுகளும் கிடைத்தன. அதாவது 38,212 ஓட்டு வித்தியாசத்தில் காமராஜர் வென்றார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading