2024-ம் ஆண்டின் சிறந்த டி 20 கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை தேர்வு செய்துள்ளது ஐசிசி.
25 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் கடந்த ஆண்டில் 18 டி 20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். மேலும் ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடரில் அர்ஷ்தீப் சிங் பவர்பிளேவிலும், இறுதிக்கட்ட ஓவர்களில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தியிருந்தார். இந்தத் தொடரில் அவர் 17 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இதன் மூலம் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் பசல்ஹக் பரூக்கியுடன் முதலிடத்தை பகிர்ந்திருந்தார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றதில் அர்ஷ்தீப் சிங் முக்கிய பங்கு வகித்திருந்தார். இறுதிப் போட்டியில் அவர், 20 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். கேப்டன் எய்டன் மார்க்ரமை விரைவிலேயே ஆட்டமிழக்கச் செய்த அர்ஷ்தீப் சிங், நடுஓவர்களில் அச்சுறுத்தல் கொடுத்து வந்த குயிண்டன் டி காக்கையும் வெளியேற்றி இருந்தார். மேலும் 19-வது ஓவரை வீசி வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து தென் ஆப்பிரிக்க அணியின் அழுத்தத்தை அதிகரித்திருந்தார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.