“என்னிடம் பணம் இல்லை; டிக்கெட் வாங்கச் சொன்னேன்” – மெட்ரோவில் பிரதமர் மோடி தனக்கு டிக்கெட் வாங்கியது பற்றி டி.கே.சிவகுமார்

பெங்களூரு பிங்க் லைன் மெட்ரோவில் பயணித்தபோது தன்னிடம் பணம் இல்லை என்பதால், “என் டிக்கெட்டை நீங்கள் வாங்குங்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கூறியதாகவும், அவர் தனது ஸ்மார்ட் கார்டை ஸ்வைப் செய்து தனக்கும் டிக்கெட் வாங்கியதாகவும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் நகைச்சுவையாகத் தெரிவித்தார்.

“என்னிடம் பணம் இல்லை. அதனால், ‘என் டிக்கெட்டை நீங்கள் வாங்குங்கள்’ என்று அவரிடம் சொன்னேன். அவர் எனக்கும் சேர்த்து தனது கார்டை ஸ்வைப் செய்தார்” என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் சிவகுமார் கூறினார்.

பிரதமர் மோடி நவம்பர் 13 அன்று திறந்து வைத்த பிங்க் லைன் மெட்ரோவில், சனிக்கிழமை (நவ.14) செய்தியாளர்களுடன் பயணித்தபோது சிவகுமார் இவ்வாறு தெரிவித்தார். பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் (BMRCL) வெளியிட்ட அறிக்கையின்படி, அவர் கலேனா அக்ரஹாரா மெட்ரோ நிலையத்தில் ரயிலில் ஏறி, எஸ்.ஜி.பாளையா மெட்ரோ நிலையத்தில் இறங்கினார்.

திறப்பு விழாவின்போது பிரதமருடன் ஏற்பட்ட நட்புறவான உரையாடல் குறித்துக் கேட்டதற்கு, அரசியல் கருத்து வேறுபாடுகள் வளர்ச்சிக்கும், தேசிய நலனுக்கான ஒத்துழைப்புக்கும் தடையாக இருக்கக் கூடாது என முதல்வர் கூறினார்.

மோடியுடன் மைசூருவுக்கு ஹெலிகாப்டரில் சென்றது உள்ளிட்ட பயணங்களின்போது என்ன பேசினார்கள் என்பதை வெளிப்படுத்த சிவகுமார் மறுத்துவிட்டார். “அவை அனைத்தையும் என்னால் வெளியிட முடியாது” எனக் கூறிய அவர், இருவருக்குமான உறவு “மனித உறவுகள் மற்றும் பரஸ்பர மரியாதை” அடிப்படையிலானது எனக் குறிப்பிட்டார். ராகுல் காந்தி, சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் தன்னிடம் அன்பும் மரியாதையும் காட்டுவதாகத் தெரிவித்தார்.

பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல் காந்தி முன்வைத்த தொலைபேசி ஒட்டுக்கேட்பு குற்றச்சாட்டுகள் மற்றும் அவர் விடுத்த விவாத சவால் குறித்துக் கேட்டபோது, அது தொடர்பான தகவல்களைத் திரட்டி வருவதாகவும், விவரங்களை ஆராய்ந்த பிறகு பதிலளிப்பதாகவும் சிவகுமார் தெரிவித்தார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading