முக்கிய செய்திகள் – 10.06.22

செய்திகள் தற்போதைய செய்தி

வாடிப்பட்டி அருகேயுள்ள அய்யங்கொட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வுமேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரணியன், அங்கு பணியில் இல்லாத மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத விவகாரங்களில் அரசு தலையிடக் கூடாது,என்றும், ஆதீன விவகாரங்களில் மூக்கை நுழைக்க தமிழக அரசு முயற்சி செய்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில், ஆன்லைன் ரம்மிக்கு எதிராக அவசரச் சட்டம் இயற்றுவது தொடர்பாக குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் ரம்மியில் பணத்தை இழந்த கணவர் -மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.

ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுனர் குழு அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கடந்த ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட பாமக தான் காரணம். இப்போதும் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுவதற்கும் பாமக தான் காரணம் என ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வழங்குவதற்காக 40,000 மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்த அரசாணைக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்ததால், வழக்கை மனுதாரர் திரும்ப பெற்றார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆர்த்தி ஸ்கேன்ஸ் மற்றும் மருத்துவமனையில் 4வது நாளாக வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வரும் நிலையில், அங்கே முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உயர் நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக பெண் ஒருவர் சோப்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் மதுபோதையில் தண்டவாளத்தில் உறங்கிய 2 வாலிபர்கள் ரயில் மோதி உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். காயம் அடைந்த ஜெபசிங் என்ற இளைஞர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை பெருநகர காவல் துறையின் நவீன காவல் கட்டுப்பாட்டறையின் சேவையை பலப்படுத்தும் விதமாகவும், சென்னை பெருநகரில் போக்குவரத்தினை சீர் செய்திடவும் ரூ. 14.71 கோடியில் 93 போக்குவரத்து காவல் ரோந்து வாகனங்களின் சேவையை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அநீதியை அழிக்க பெருமாளின் பேரன் அவதாரமாக வந்துள்ளேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து ஒரு வார காலத்திற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு உறுதி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை மறு நிர்ணயம் செய்யும் வகையில் புதிய கட்டண உயர்வு குறித்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *