இளைஞர் திறன் திருவிழா முதல்வர் ஆற்றிய உரை!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (25.5.2022) இராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில அளவிலான முதல் “இளைஞர் திறன் திருவிழா”வை தொடங்கி வைத்து, ஆற்றிய உரை:

சிறப்பான விழா, இந்த சிறப்புக்குரிய விழாவில் பாரம்பரியமும், பெருமையும் கொண்ட இராணி மேரிக் கல்லூரி வளாகத்தில் நடைபெறுவது என்பது மிக மிகப் பொருத்தமான ஒன்றாக அமைந்திருக்கின்றது.

உணர்ச்சிமிக்க மாணவிகள் புடைசூழ நடைபெறக்கூடிய விழாவாக இந்த விழா நடந்து கொண்டிருக்கிறது. எல்லோரும் சொன்னார்கள், இந்தக் கல்லூரியினுடைய வரலாற்றைப்பற்றி. 1915-ஆம் ஆண்டு கேப்பர் இல்லம் என்ற பெயரில் இருந்த புகழ்பெற்ற கட்டடத்தில்தான் இராணிமேரிக் கல்லூரி தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த கேப்பர் இல்லம் என்று சொல்கிறபோது, என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக இது அமைந்திருக்கிறது. 

இந்தியாவில் முதன்முதலாக மூன்று மகளிர் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. அதிலே இதுவும் ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும், முதல் மகளிர் கல்லூரி எது என்று கேட்டால் இந்த இராணி மேரிக் கல்லூரி தான். இலட்சக்கணக்கான மகளிருக்குக் கல்வி கொடுத்த இந்த நிறுவனத்தில், கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய இந்தக் கல்லூரியில், இந்த விழா நடைபெறுவது என்பது பொருத்தமாக அமைந்திருக்கிறது. சரியான இடத்தைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். ஆக, அப்படி தேர்ந்தெடுத்து நடத்தக்கூடிய துறையின் அதிகாரிகளுக்கும், துறையினுடைய அமைச்சர்களுக்கும், நான் முதலில் முதலமைச்சர் என்கின்ற முறையில் நன்றி தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த இராணிமேரிக் கல்லூரிக்குள் நுழைகிற போது எனக்கு பழைய நினைவுகள் வந்தது. பேசிய அமைச்சர்கள் அதைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். பழம்பெரும் பெருமை கொண்டிருக்கக்கூடிய, பெரிய வரலாற்றைப் பெற்றிருக்கக்கூடிய இந்தக் கல்லூரியை இடிப்பதற்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா முனைந்தார்கள்.

நான் இந்த நேரத்தில் அரசியல் எல்லாம் பேச விரும்பவில்லை. அது தேவையும் இல்லை. ஆனால் அன்றைக்கு அது இடிக்கக் கூடாது என்று இந்தக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவிகள், பழைய மாணவிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். அதைத் தொடர்ந்து, உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட போராட்டத்தை நடத்திய காரணத்தால் அன்றைக்கு இருந்த அரசு, கல்லூரிக்குள் வரும் குடிநீர் சப்ளையை அன்றைக்கு துண்டித்தது. நிறுத்தி வைத்தார்கள். இன்னும் கூட சொல்ல வேண்டுமென்றால், கழிப்பறைகளை பயன்படுத்தக்கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. கல்லூரியையே மூடிவிட்டு, இங்கு பணியாற்றிய பேராசிரியைகளை வேறு ஊர்களுக்கு இடமாற்றம் செய்தார்கள்.

அப்போது இங்கு படித்துக் கொண்டிருக்கக்கூடிய மாணவியர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். நான் எதிர்க்கட்சியினுடைய தலைவராக பொறுப்பில் இருக்கிறேன். அன்றைக்கு சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கிறபோது, தலைவர் கருணாநிதியிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது. கருணாநிதி சொல்கிறார். வீட்டிற்கு வருகிற வழியில், இராணி மேரி கல்லூரியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கக்கூடிய மாணவிகளை சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டு வா, திமுக ஆதரவு தரும் என்ற அந்த செய்தியை சொல்லிவிட்டு வா என்று எனக்கு தகவல் அனுப்பினார். ஆதரவு தெரிவிக்க நான் வந்தேன். நான் வந்தவுடன் வாசலில் அந்த கேட்டில் இருக்கக்கூடிய காவலர்கள், காவலர்கள் ரொம்ப மரியாதையுடன் கதவை திறந்து வெளியில் விட்டார்கள். ஆக, அப்படி கல்லூரிக்குள் வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கக்கூடிய மாணவிகள் எல்லாம் நான் சந்தித்து. ஒரு இரண்டு நிமிடம் அல்லது மூன்று நிமிடம் அவர்களிடத்தில் பேசிவிட்டுத்தான் திரும்பிப் போனேன். கேட் திறந்திருந்தது. ஆனால் இங்கே தான் நீங்கள் கவனிக்க வேண்டும். நான் வருகிறபோது வாசலில் நின்று கொண்டிருந்த போலீஸ் அதிகாரிகள் கேட்டை திறந்துவிட்டார்கள், உள்ளே வந்தேன். வந்து மாணவிகளை சந்தித்துவிட்டு, ஆறுதல் சொல்லிவிட்டு, ஊக்கப்படுத்திவிட்டு, உற்சாகப்படுத்திவிட்டு வெளியில் திரும்ப வருகிறபோது. மூடியிருந்த கேட்டை மறுபடியும் திறந்துவிட்டார்கள், அப்போது தான் வெளியிலே போகிறேன்.

இதுதான் நடந்தது. ஆனால், இது நடந்த நேரம் 2 மணி அல்லது 3 மணி அளவில் என்று நினைக்கிறேன். ஆனால் இரவு 9 மணிக்கு என்னுடைய வீட்டிற்கு போலீஸ் வந்தது. உங்களை கைது செய்ய வந்திருக்கிறோம் என்று சொன்னார்கள். என்ன காரணம் என்று கேட்டேன்? இராணி மேரி கல்லூரியில் பூட்டியிருந்த கேட் மேலே ஏறி குதித்து, நீங்கள் உள்ளே சென்று மாணவிகளை தூண்டிவிட்டு வந்திருக்கிறீர்கள். அதற்காக உங்கள் மீது வழக்குப் போடப்பட்டிருக்கிறது என்று சொல்லி என்னைக் கைது செய்தார்கள்.

அதையெல்லாம் அமைச்சர் குறிப்பிட்டார்கள். கடலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு மாத காலம் நான் சிறையில் இருந்தேன். அதில் எனக்கு ஒரு பெரிய பெருமை. ஆகவே இந்தக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கக்கூடிய, கல்லூரியில் பேராசிரியராக இருக்கக்கூடிய, கல்லூரியினுடைய ஆசிரியர்களாக இருக்கக்கூடிய அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ, அதே உரிமை எனக்கும் உண்டு என்கின்ற தலைநிமிர்ந்து உங்களிடத்தில் பேச வந்திருக்கிறேன். நான் ஏற்கனவே சொன்னேன். இந்த இடத்திற்கு கேப்பர் என்ற பெயர். கடலூரில் என்னை கொண்டு போய் சிறையில் அடைத்து வைத்தார்களே அந்த சிறைக்கு என்ன பெயர் என்று கேட்டால் அதுவும் கேப்பர் சிறை. ஆகவே, என்னுடைய வாழ்நாளில் எத்தனையோ நிகழ்ச்சிகள், மறக்க முடியாத நிகழ்ச்சிகளாக இருந்தாலும், இந்தக் கல்லூரிக்காக போராடிய மாணவ, மாணவிகளுக்கு நான் ஊக்கப்படுத்துகின்ற நேரத்தில், நான் சிறைபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்து வாடினேன் என்று சொன்னால், வாடினேன் என்பது அல்ல, மகிழ்ச்சியோடு தான் இருந்தேன். அதனால், சிறையில் அடைக்கப்பட்டேன் என்று சொன்னால், இதுவும் என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத, ஒரு சம்பவமாக இன்றைக்கும் இருந்து கொண்டிருக்கிறது என்பதை நான் பெருமையோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஆகவே, அப்படிப்பட்ட முக்கியமான இடத்தைப் பிடித்த இடம் தான் இந்த இராணி மேரி கல்லூரி.

இத்தகைய புகழ்பெற்ற இந்த இராணிமேரிக் கல்லூரியில் 3.2 கோடி ரூபாய் மதிப்பில் கலைஞர் மாளிகை கட்டப்பட்டது. கடந்த கால ஆட்சியாளர்கள் கலைஞர் என்கின்ற அந்த பெயரை நீக்கி விட்டார்கள். அதனை மீண்டும் இப்போது நாம் சூட்டி இருக்கிறோம். கட்டடங்களில் இருக்கும் பெயரை நீக்குகிற காரணத்தால் கலைஞருடைய பெயரை மக்கள் மனதில் இருந்து நீக்கிவிட முடியாது. அவர் கோடிக்கணக்கான மக்களுடைய உள்ளத்தில், உணர்வில் இன்றைக்கும் அவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அத்தகைய பெருமைக்குரிய கலைஞர் பெயரால் மாளிகை அமைந்திருக்கும் இடம்தான் இராணிமேரிக் கல்லூரி ஆகும்.

Leave a Reply

Your email address will not be published.

Previous post கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக கேதார்நாத் யாத்திரை நிறுத்தம்
Next post பைக் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!
%d bloggers like this: