பத்தாம் வகுப்பு தேர்வில் தந்தை பாஸ் மகன் ஃபெயில்
மகாராஷ்டிர மாநிலம் புணேவின் பாபாசாஹிப் அம்பேத்கர் தியாஸ் பிளாட் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் வாக்மரே வயது 43 இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப சூழல் காரணமாக தன்னுடைய பள்ளிப்படிப்பை 7ஆம் வகுப்போடு நிறுத்திவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

அதன் பிறகு திருமணம், பிள்ளைகள் என காலம் செல்லச் செல்ல அவரால் பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் போய்விட்டது. இருப்பினும் எப்படியாவது படித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த பாஸ்கர் மீண்டும் பள்ளி கல்வியை தொடர முடிவு செய்தார். அதன்படி, பத்தாம் வகுப்பு தேர்வை எழுத விண்ணப்பித்தார். இவர் மட்டும் இன்றி இவரின் மகனும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தார்.
இருவரும் சேர்ந்து படித்து தேர்வையும் எழுதியிருக்கிறார்கள். தேர்வு முடிவுகள் கடந்த ஜுன் 17ஆம் தேதியன்று வெளியானது. இதில் பாஸ்கர் தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறார். அவரது மகன் இரண்டு பாடங்களில் ஃபெயில் ஆகியிருக்கிறார்.
இது குறித்து பாஸ்கர் வாக்மரே கூறுகையில், “எனக்கு அதிகம் படிக்க வேண்டும் என்று ஆரம்பம் முதலே ஆர்வம் அதிகம். ஆனால் குடும்ப சூழல் காரணமாக என்னால் படிப்பை தொடர முடியவில்லை. சமீப காலங்களில் கல்வியை தொடர முடிவு செய்யலாமா என யோசனை செய்து வந்தேன். அதன்படி பத்தாம் வகுப்பு முடித்து ஏதேனும் பயிற்சி வகுப்புகளுக்கு சென்றால், வருமானத்தை அதிகப்படுத்தும் என நினைத்தேன். இதன் காரணமாக தான் பத்தாம் வகுப்பு தேர்வுகளில் கலந்து கொள்ள முடிவு செய்தேன். எனது மகனும் இதே ஆண்டு தான் பத்தாம் வகுப்பு தேர்வில் கலந்து கொண்டான். இது எனக்கு உதவியாக இருந்தது. தேர்வில் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியை கொடுத்தாலும், என்னுடைய மகன் தேர்வில் தோல்வி அடைந்தது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் மகனின் துணைத் தேர்வுக்காக நாங்கள் உறுதுணையாக இருப்போம்.” என்றார்.