தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவை பிரம்மாண்டமாக நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடத்தப்படுகிறது.
பாஜகவினர் அழைத்தால் சசிகலா அங்கு செல்லட்டும், சசிகலாவை ஒருபோதும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கூடமலையில் கல்லூரி மாணவி ரோஜா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு, ஜல்லிமேடு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் பெண்ணிடம் கூகுள் பே மூலம் லஞ்சம் பெற்ற தலைமை காவலர் பாலசுப்பிரமணியம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் கொரோனா பரவலால் விடுதியில் உள்ள மாணவர்கள் சொந்த ஊருக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. 235 மாணவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இதுவரை 35 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை வடபழனி முருகன் கோயிலில் வைகாசி பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது.
சிமெண்ட் விலையை ஒரு மூட்டைக்கு ரூ.20 முதல் 25 வரை உயர்த்தியது ராம்கோ நிறுவனம்.
வெளிநாடுகளிலிருந்து மதுரை திரும்பிய 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்ய உயர்மட்ட குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் வரும் 20ஆம் தேதி துவங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் தற்காலிக அடிப்படையில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்த பால்பாண்டி என்பவர் வேலையிழந்த விரக்தியில் விஷமருந்தி வடபழஞ்சி அருகேயுள்ள குட்டைமலை இடுக்கில் சிக்கி கொண்டார். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் அவரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரையில் எல்லீஸ் நகரில் நடைபெற்ற திருமணத்திற்கு வந்தவருக்கு ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள இருச்சக்கர வாகனத்தை மணமக்கள் பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி அளித்தனர்.
இஸ்லாமியர்களின் நலனுக்கு எனக்கூறி பணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ் பெறப்பட்டது.
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கும் கீழ் நகைக் கடன் பெற்ற 100 சதவீதம் பேருக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி இன்று அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக பாரத் நெட் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின். தமிழகத்தின் அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளும் பாதுகாப்பான மற்றும் விரைவான இணைய சேவைகளைப் பெற இத்திட்டம் உதவிடும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மீது மளிகைப் பொருட்கள் திணிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், அவர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
நூல் விலை உயர்வை கண்டித்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் ஆவரம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள், 5ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.