குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ஆம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து தில்லியில் உள்ள விக்யான் பவனில் இன்று பிற்பகல் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில், “தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன்பாக தேர்தலை நடத்தி புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. புதிய குடியரசுத் தலைவர் வரும் ஜூலை மாதம் 25ஆம் தேதி பதவியேற்பார். மாநிலங்களவைத் தலைமைச் செயலாளர் பிரமோத் சந்திரமோடி தேர்தல் அதிகாரியாக செயல்படுவார்.
நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகளில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும். குடியரசுத் தலைவர் தேர்தலில் மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431 ஆகும். நாடு முழுவதும் 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில சட்டப்பேரவைகளில் உள்ள உறுப்பினர்கள் 4,033 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க உள்ளனர். இந்திய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் வரும் ஜூலை 21ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜூன்15ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய வரும் ஜூன் 29ஆம் தேதி அன்று கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை வரும் ஜூன் 30- ஆம் தேதியும், வேட்பு மனுத் திரும்ப பெற வரும் ஜூலை 2 ஆம் தேதி கடைசி நாளாகும்” எனத் தெரிவித்துள்ளார்.