சேற்றுத் திருவிழா விளாத்திகுளத்தில் மக்கள் உற்சாகம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை அடுத்த புதூர், கந்தசாமிபுரத்தில் ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோயிலில் வைகாசி மாதம் பொங்கல் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவிழா நடத்தப்படாமல் இருந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு வைகாசி திருவிழா கடந்த 10 நாட்களாக வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இத்திருவிழாவில் ஆண்கள் உடம்பில் சேற்றை பூசிக்கொண்டு ஊரை வலம்வருவது பாரம்பரிய நிகழ்ச்சியாக நடைபெற்று வருகிறது. சேற்றை உடல் முழுவதும் பூசிக் கொண்டால் அந்த மண்ணில் உள்ள நுண் சத்துக்கள் நம் உடலுக்கும் கிடைக்கும் என்பதும் சேற்றுத் திருவிழா ஆரம்பிக்கப்பட்டதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இந்தாண்டு “சேற்றுத் திருவிழா” புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் இக்கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் தங்களது உடம்பில் சேற்றைப் பூசிக் கொண்டு, கைகளில் வேப்பிலையை ஏந்தியவாறு ஊரிலுள்ள பொது கண்மாயில் இருந்து தொடங்கி கிராமம் முழுவதும் சுற்றி இறுதியில் கோயிலை வந்தடைந்தனர். இந்த விசேஷ வழிபாட்டினை மஞ்சள் நீர் விளையாட்டுடன் முடித்தனர்.