தமிழில் பேசி ஆர்டர் செய்து அசத்திய அமெரிக்க யூடியூபர்
அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் சியாமானிக் (Xiaomanyc). யூடியூப் தளத்தில் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். அவர் தான் தமிழில் பேசி அசத்தியுள்ளார்.
நியூயார்க் நகரில் தமிழர்கள் நடத்தும் தோசை கடைக்கு சென்ற அவர், தமிழிலே பேசி உணவை ஆர்டர் செய்து அங்கிருந்தவர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார். அமெரிக்கரின் அழகு தமிழில் அசந்து போன கடை உரிமையாளர், அவருக்கான உணவை இலவசமாகக் கொடுத்தார். ஆனால், சியாமானியோ ரொம்ப நன்றி என்று கூறி சாப்பாட்டிற்கு பணம் வழங்கினார்.

தமிழ் மொழி குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட சியாமானிக் உலகின் பல பகுதிகளில் இன்றும் பேசப்படும் பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று புகழாரம் சூட்டினார். மேலும் அவர் கூறுகையில், “உலகில் பழமையான மொழிகளில் ஒன்றாக உள்ள தமிழ் மொழி இன்றும் பயன்பாட்டில் உள்ளதை அறிந்த பிறகு, எனக்கு தமிழ் மொழி மீது மிகுந்த ஆர்வம் வந்தது. இந்தியா மற்றும் இலங்கையில் அதிகம் பேசப்படும் இந்த மொழி அமெரிக்காவில் கொஞ்சம் அரிதான விஷயம்தான். இருப்பினும் ஆன்லைன் மூலம் தமிழ் கற்று வருகிறேன்.
நியூயார்க் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ள தமிழர்கள் நடத்தும் உணவுக் கடைகளுக்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்கு இருக்கும் உணவக உரிமையாளர், ஊழியர் என அனைவரிடத்திலும் தமிழில் பேசினேன்” என பூரிப்பாக தெரிவித்துள்ளார் சியாமானிக்.
இவரது வீடியோ யூடியூப் வலைதளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இந்த வீடியோவை சுமார் 21 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். பல்லாயிரம் பேர் லைக் செய்துள்ளனர். பலரும், யூடியூபரின் முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.