வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை!
தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டுள்ள நிலையில் சில ஐ.டி. நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து வேலை பார்க்கும் படி கூறியுள்ளது. அதுவும் சுழற்சி முறையில். அதாவது வாரத்தில் மூன்று நாட்கள் வீட்டில் இருந்து வேலை இரண்டு நாட்கள் அலுவலகம் சென்று வேலை பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில் இங்கிலாந்து முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற புதிய திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான். அதுவும் சம்பளத்தைக் குறைக்காமல் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற இந்த அருமையான திட்டத்தினை பல்வேறு நிறுவனங்கள் அமல்படுத்தியுள்ளன.
இந்த திட்டத்தில் 70 நிறுவனங்களைச் சேர்ந்த 3000 ஊழியர்கள் கலந்து கொள்கிறார்கள். வரும் டிசம்பர் மாதம் வரை 6 மாத காலம் சோதனை முயற்சியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் பங்கேற்கும் ஊழியர்கள் அவர்களின் வழக்கமான சம்பளத்தினை பெறுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் தங்களது வழக்கமான பணி நேரத்தில் 80 சதவிகித நேரத்தின் அடிப்படையில் பணிபுரிவார்கள். ஆனால், அவர்களுடைய வேலைத்திறனும் 100 சதவிதமாக இருக்கும். அதாவது 5 நாட்களில் அவர்கள் செய்யும் வேலை நான்கு நாட்களில் செய்யலாம் என்ற அடிப்படையில் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்படும்.
இந்த சோதனை முயற்சியில் இங்கிலாந்தில் உள்ள வங்கிகள், ஐடி நிறுவனங்கள், நிதி சேவைகள், சட்ட ஆலோசனை, வீட்டுவசதி, வாகன சேவைகள், ஆன்லைன் சில்லறை விற்பனை, பராமரிப்பு இல்லங்கள், அனிமேஷன் ஸ்டுடியோக்கள், டிஜிட்டல் மார்க்கெட்டிங் உட்பட பல துறைகளை சேர்ந்த நிறுவனங்களும் பங்கேற்கின்றன.
ஏற்கனவே ஸ்பெயின், ஐஸ்லாந்து, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இதனை சோதனை நடத்தி, வெற்றிகரமாக முடிவினையும் கொடுத்துள்ளன. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் வரும் ஆகஸ்ட் மாதம் இந்த சோதனையை நடத்த திட்டமிட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது இங்கிலாந்து நாட்டிலும் வாரத்தில் 4 நாள் வேலை என்ற சோதனையை அந்த நாடு தொடங்கவுள்ளது.
வீக் குளோபல், பாஸ்டன் கல்லூரி வல்லுநர்கள், கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து இந்த சோதனையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.