மாவீரன் திரை விமர்சனம்

சினிமா

‘மண்டேலா’வில் சமூக அக்கறையுடன் கதை சொன்ன, இயக்குநர் மடோன் அஸ்வின், இதில் அதோடு ஃபேன்டசியை குழைத்திருக்கிறார். இருப்பிட உரிமை மறுக்கப்படும் அடித்தட்டு மக்கள் பிரச்சினையை மிகை யதார்த்த அம்சத்துடன் அழகாக ஒன்றிணைத்துக் கதை சொல்லியிருப்பதில் கவர்கிறார்.

பயந்த சுபாவம் கொண்ட சத்யா (சிவகார்த்திகேயன்). எதையும் ‘அட்ஜஸ்ட் பண்ணி வாழணும்’ என்ற கொள்கையுடைய அவர் நாளிதழ் ஒன்றில், படக் கதை வரைகிற வேலைபார்க்கிறார், தனது அம்மா, (சரிதா) சகோதரி (மோனிஷா)யுடன் குடிசை பகுதியில் வாழ்ந்து வருகிறார்.ஊழல் அமைச்சர் ஜெயக்கொடி (மிஷ்கின்).

அங்கு வசிப்பவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டியிருப்பதாகக் கூறி, அப்புறப்படுத்துகிறது அரசு. ஊழலால் கட்டப்பட்ட அந்தக் குடியிருப்பின் சுவரில் கை வைத்தால் பெயர்ந்துவிழுகிறது. சுவரில் எங்கெங்கும் கீறல்.எப்போது இடிந்து வீழும் என்ற அதிர்ச்சியில் வாழ்கின்றார்கள். இந்த ஊழலுக்குப் பின்னால் அமைச்சர் ஜெயக்கொடி (மிஷ்கின்) இருக்கிறார் என்பது தெரிந்தும் எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறார் சத்யா.

ஒரு கட்டத்தில் அம்மாவின் வசை சொல் தாங்காமல் தற்கொலைக்கு சத்யா முயல, அவர் காதில் ஓர் குரல் வந்து பேசுகிறது. அந்தக் குரல் பயம்கொண்ட சத்யாவை பலம் கொண்டவனாக எப்படி மாற்றுகிறது என்பதும் அந்தப் பலத்தால் அவன் மக்களை எப்படி காப்பாற்றுகிறான் என்பதும் மீதிக் கதை.

தான் வரையும் காமிக் கேரக்டர், அசரீரியாகி கொடுக்கும் ‘வாய்ஸ்’ (விஜய் சேதுபதியின் குரல்), பயந்த கதாபாத்திரத்தை ஹீரோவாக்கும் ஐடியா புதிதாக இருக்கிறது. அந்த குரலுக்காக அவர் மேலே பார்ப்பதும் ‘அது இப்போது என்ன சொல்லும்?’, ‘அடுத்து என்ன நடக்கும்?’ என்கிற ஆவலும் பார்வையாளனை திரைக்குள் ஈர்த்து, ஆர்வமாக அமர வைத்துவிடுகின்றன.

கூர்மையான திரைக்கதையாக்கமும் சிவகார்த்திகேயன், யோகிபாபுவின் டைமிங் காமெடியும் முதல் பாதியை வேகமாக இழுத்துச் செல்கின்றன. வட இந்திய தொழிலாளியாக வேலைக்குச் சேரும் யோகிபாபுவை கதையோடு இணைந்த காமெடிக்குள் பயன்படுத்தி இருக்கும் காட்சிகள் சிறப்பு. இந்த முதல் பாதி எதிர்பார்ப்பை, இரண்டாம் பாதியில் வழக்கமான சினிமாவாக்கி ஏமாற்றி இருக்கிறார் இயக்குநர்.

சிவகார்த்திகேயன், காதில் கேட்கும் குரலின் வழிகாட்டலுக்காக மேலே பார்ப்பது, ஒரு கட்டத்துக்கு மேல் சலிப்பை ஏற்படுத்துகிறது. அதேபோல் நாயகனுக்கு குரல் கேட்பது திடீரென்று நிற்பதற்கும் மீண்டும் கேட்பதற்கும் வலுவான காரணங்கள் சொல்லப்படவில்லை.

முன்னணி நாயகனான சிவகார்த்திகேயன், வழக்கமான சாகச நாயகத்தன்மை அற்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்காகவே அவரைப் பாராட்டலாம். பயந்த சுபாவத்தையும் அப்பாவியின் உடல்மொழியையும் கச்சிதமாக வெளிப்படுத்தியிருப்பதில் ஒரு நடிகராகவும் பல மடங்கு முன்னேறியிருக்கிறார். கிளைமாக்ஸில் ‘இந்த வீட்டுல நீ தங்குவியா?’ என்று மிஷ்கினிடம் கேட்கிற ஆவேசத்தில், அனல்.

அதிதி ஷங்கருக்கு அதிக வேலையில்லை. கதாநாயகனுக்கு உதவும் கேரக்டரில் வந்துபோகிறார். வில்லனாக மிஷ்கின் ஆரம்பத்தில் மிரட்டினாலும் அவருடைய அடுத்தடுத்த உருட்டல்களில் வித்தியாசம் ஏதுமில்லை. சரிதா, ஓர் ஏழைத்தாயை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். நாயகன் காதில் ஒலிக்கும் குரலாக விஜய் சேதுபதி சிறந்த குரல் நடிப்பைத் தந்திருக்கிறார். தெலுங்கு நடிகர் சுனில், ஏதோ செய்யப்போகிறார் என்று பார்த்தால், டொப்பென்று காலி செய்துவிடுகிறார்கள் அவர் கேரக்டரை. அருவி மதன் உட்பட துணை கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

விது வியன்னாவின்,ஒளிப்பதிவும் பரத் சங்கரின் பின்னணி இசையும் மாவீரனின் ஓட்டத்துக்கு துணை புரிந்திருக்கின்றன. முதல் பாகத்தைப் போல இரண்டாம் பாதியிலும் கவனம் செலுத்தியிருந்தால் இந்த மாவீரன் இன்னும் ஈர்த்திருப்பார்.