குஜராத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

விளையாட்டு

டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்தது.

சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 92 ரன்கள் விளாசினார். அதேபோல் குஜராத் அணி சார்பாக ரஷீத் கான், முகமது ஷமி மற்றும் அல்ஜாரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணிக்கு சாஹா – சுப்மன் கில் கூட்டணி தொடக்க கொடுத்தது. கில் சிறிது ஒவர்கள் அடக்கி வாசிக்க, சாஹா தொடக்கம் முதலே வெளுத்து வாங்கினார். அதிரடியாக 25 ரன்கள் சேர்த்த சாஹாவை இளம் வீரர் ஹங்கர்கேகர் வீழ்த்தினார்.

தொடர்ந்து வில்லியம்சனுக்கு பதிலாக சாய் சுதர்சன் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கினார். அவரும் சுப்மன் கில்லும் அதிரடி காட்ட குஜராத் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இதனால் பவர் பிளே ஓவர்களுக்குள் தோனி ஸ்பின்னர்களை கொண்டு வந்தார். இருப்பினும் ரன்கள் செல்வதை மட்டும் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் 10வது ஓவரின் போது சாய் சுதர்சன் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா 8 ரன்களில் ஜடேஜா சுழலில் போல்டானார்.

இருப்பினும் மறுபக்கம் சுப்மன் கில் 30 பந்துகளில் அரைசதம் விளாசி ஆட்டத்தை முடிக்கும் நோக்கில் விளையாடி வந்தார். ஆனால் ராயுடுவுக்கு பதிலாக இம்பேக்ட் பிளேயராக வந்த துஷார் தேஷ்பாண்டே சுப்மன் கில்லை 63 ரன்களுக்கு வீழ்த்தினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து களத்தில் விஜய் சங்கர் – டிவாட்டியா இணை இருந்தது.

3 ஓவர்களுக்கு 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இளம் வீரர் ஹங்கர்கேகர் வீசிய ஓவரில் விஜய் சங்கர் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் 2 ஓவர்களில் 23 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது. இதையடுத்து தீபக் சஹர் வீசிய பந்தில், எதிர்கொண்ட முதல் பந்திலேயே ரஷீத் கான் சிக்சர் அடித்தார்.

இதன்பின்னர் அடுத்த பந்திலேயே பவுண்டரி அடிக்க, கடைசி ஓவரில் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது. சென்னை அணி சார்பாக துஷார் தேஷ்பாண்டே பந்துவீச அழைக்கப்பட்டார். குஜராத் அணியின் டிவாட்டியா பேட்டிங் செய்ய, அடுத்தடுத்து சிக்சர் மற்றும் பவுண்டரியை விளாசி வெற்றிக்கு அழைத்து சென்றார். இதன் மூலம் குஜராத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.