இந்த லஞ்ச பணத்தை யாரிடம் கொடுக்க வேண்டும் !

செய்திகள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் சங்கீதா தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் ஐந்தாவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் இந்திராதேவி, கூட்டம் நடந்து கொண்டிருந்த போது இந்திரா தேவி வித்தியாசமான முறையீடு ஒன்றை வைத்தார்.

அதில், வீட்டு தீர்வை, பெயர் மாற்றம் செய்வதற்கு தனது வார்டைச் சேர்ந்த பகுதி மக்கள் 11 பேர், மாநகராட்சியில் மனு அளித்துள்ளதாகவும், அதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டிய இந்திராதேவி, புகாரின் நிலை என்ன என்று அதிகாரிகளிடம் முறையிட்டால், அதிகாரிகள் மனு ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக பகிரங்க குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய இந்திரா தேவி, நானும் பலமுறை கேட்டு பயனளிக்கவில்லை என்பதால், அதிகாரிகள் கேட்கும் லஞ்சத்தை கொடுத்தால் தான் வேலை நடக்கும் என தெரிகிறது, எனவே அந்த லஞ்சப் பணமான 1 லட்சத்து 10ஆயிரம் ரூபாயை நானே எடுத்து வந்திருக்கிறேன். அதை நானே அதிகாரிகளிடம் கொடுத்து விடுகிறேன் என்று கூறி, கையிலிருந்த ஐநூறு ரூபாய் கட்டை மேயரிடம் நீட்டினார்.

இதை பார்த்த மேயர் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போயினர். ஆனால், அதை சற்றும் கண்டுகொள்ளாத கவுன்சிலர் இந்திராதேவி, என்னிடம் இருக்கும் இந்த ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை யாரிடம் தர வேண்டும் என்று கூறுங்கள், என்று மேயரை நோக்கிச் சென்றார்.

இதை தொடர்ந்து மேயர், சம்மந்தப்பட்ட கவுன்சிலரை சமாதானம் செய்ததோடு, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையரை கேட்டுக் கொண்டார். திமுக கவுன்சிலர் நேரடியாக லஞ்ச பணத்தோடு வந்து, அதிகாரிகள் மீது நேரடியாக குற்றச்சாட்டு வைத்த சம்பவம், சிவகாசி மாமன்ற கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

– source by Hindustan Times Tamil